Tuesday, February 25, 2014

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: தவிர்க்க வேண்டிய தவறுகள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்பு உணர்வு இன்னும் அதிக அளவில் போய்ச் சேரவில்லை. எனவே, படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதும், அதை கிளைம் செய்யும்போதும் பல தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் பாலிசி எடுத்தும் பலருக்கும் அதற்குரிய பலன் கிடைக்காமலே போய்விடுகிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன, இந்த தவறுகளை நாம் எப்படி செய்யாமல் இருக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

1 முதல் தவறு!

வருமான வரியை மிச்சப்படுத்தவே பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கிறார்கள். நமது வயது, நமது குடும்பத்தினர்களின் வயது ஆகியவற்றை மனதில்கொண்டு தேவையான அளவு கவரேஜ் தொகை இருக்குமாறு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, வரிச் சலுகை பெறுவதற்காக சிறிய தொகைக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கக்கூடாது. இன்றைய சூழலில் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது நல்லது.


2 இரண்டாவது தவறு..!

ஏஜென்ட் சிபாரிசு செய்யும் பாலிசியை எந்த விதத்திலும் நாம் ஆராயாமல் எடுப்பது மிகப் பெரிய தவறு. பாலிசி எடுக்கும் முன் நம்முடைய தேவைகள் என்ன, குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களின் தேவை, நம்முடைய பெற்றோர்களுக்கு இருக்கும் அல்லது இருந்த உடல்நலக் குறைபாடுகள் என்ன என்பதை அறிந்து சரியான பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருக்குமானால், நமக்கும் அந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால், நமக்கான சரியான பாலிசியைத் தேர்வு செய்வது நல்லது. வாரிசுகளின் இளவயதிலேயே பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தால் அப்போதே குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய் கவரேஜ் உடன் ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

3 மூன்றாவது தவறு..!

பிரீமியம் குறைவு என்பதற்காக ஒரு பாலிசியைத் தேர்வு செய்வதும் தவறு. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை பொறுத்தவரை, பிரீமியத்தை மட்டுமே வைத்து ஒரு பாலிசியைத் தவிர்க்கக் கூடாது. பாலிசியைத் தேர்வு செய்யும்போது அந்த நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள், அதன் கிளைம் ரேஷியோ, அனுமதித்துள்ள மருத்துவமனைகள் விவரம், பாலிசியில் நீக்கப்பட்ட நோய்கள் முதலியவற்றைத் தெரிந்துகொண்டு நமக்குச் சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்




4 நான்காவது தவறு..!

இளம் வயதில் பாலிசி வேண்டாம் என தள்ளிப் போடுவது சரியல்ல. இளமைக் காலத்தில் உடல் நலத்துடன் இருக்கும்போதே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டபிறகு எடுப்பதால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். நோய்களால் பாதிக்கப்பட்டபிறகு எடுக்கும்போது நோய் இருப்பதை பாலிசி நிறுவனத்திடம் மறைப்பது தவறு. சில பாலிசி நிறுவனங்கள் நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்களை மருத்துவப் பரிசோதனை செய்தபிறகே பாலிசி எடுக்க அனுமதிப்பார்கள். அந்த சமயங்களில் நாம் தவறான தகவல் சொன்னது தெரிய வந்தால் பாலிசி எடுக்க முடியாமல் போகும். பாலிசி எடுத்தபிறகும் பொய்யான தகவல்களையோ, தவறான தகவல்களையோ தருவது நல்லதல்ல. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அது தெரியவரும்பட்சத்தில் நமது பாலிசியை ரத்து செய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது..

No comments:

Post a Comment